இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்திய தொழிலதிபர்கள் சிலர் பாதுகாப்பான நாடுகளுக்குச் சென்று வருகின்றனர். அதனால் தனிநபர் விமானங்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமானங்களிலும் டெல்லியில் இருந்து துபாய் செல்லும் விமான கட்டணம் ஐந்து மடங்கு விலை உயர்த்தப்பட்டு 80,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.