தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் ஏற்றம் குறைந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் குறைந்துள்ளது என்றாலும், திருவொற்றியூர், மாதவரம், மணலி மண்டலங்களில் தொற்றை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே இருக்கிறது. பொதுக் கூட்டத்தில் மக்கள் பாதுகாப்பு இன்றி சென்றால் கொரோனா தொற்று பரவும். ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.