திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் 2-வது கட்ட தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதற்கிடையே கடந்த 15-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் 2-வது நாளாக நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி வராததால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். முதல் கட்ட தடுப்பூசி கடந்த மாதம் போட்டுக் கொண்டவர்கள் தற்போது 2-வது கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வந்து மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தேவையான அளவு தடுப்பூசி ஓரிரு நாட்களில் வந்துவிடும் அதன் பின்னர் முதல், இரண்டாவது கட்ட தடுப்பூசி 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடப்படும் என்றார்.