மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவிலில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒழுகைமங்கலம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 4-ஆம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் கோவில் நிர்வாகத்தினர் மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
மேலும் நடைபெறுவதாக இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டதால் அங்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பல்வேறு கிராமங்களில் ஒலிபெருக்கியில் வீதி, வீதியாக சென்று தெரிவித்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விழாவின் போது பாத்திரகடை, வளையல், பாசி கடை ஆகிய கடைகளை நடத்தி வரும் சிறு, குறு வியாபாரிகளும் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் கொள்முதல் செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.