தமிழகத்தில் கொரோனா 3வது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரையிலும் பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் உச்ச நிலை மற்றும் வீழ்ச்சி நிலை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் முதல் அலையில் 2020 மே 31 ஆம் தேதிக்குப் பின் தினசரி 1000 நபர்களுக்கு தொற்று உறுதியானதாகவும், 2020 ஜூலை 27 ஆம் தேதி 6,993 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானதாகவும் கூறியுள்ளது.
அதே வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி 127 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததாகவும், முதல் அலையில் அதிகபட்சமான உயிரிழப்பு இது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து 2-வது அலையில் 2021 மே 21 ஆம் தேதி 36,184 பேருக்கு என்று ஒரே நாளில் அதிகபட்சமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று 2021 மே 30ம் தேதி 493 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததாகவும், 2-ம் அலையில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகபட்சமான உயிரிழப்பு இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் மூன்றாம் அலையில் 2021 டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பின் தினசரி 1000 நபர்களுக்கு தொற்று உறுதியானது. அதனை தொடர்ந்து 2022 ஜனவரி 22 ஆம் தேதி ஒரே நாளில் 30,744 பேருக்கு அதிகபட்சமாக தொற்று உறுதியானது. பிப்ரவரி 20ம் தேதிக்குப் பின் 1000-க்கும் கீழ் படிப்படியாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.