கொரோனா தொற்று பரவல் உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்காக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டாலும், மீண்டும் தொற்று பாதிப்புக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். தற்போது கொரோனா உருமாற்றம் குறித்த ஆராய்ச்சிகளும், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் உலக நாடுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அந்த அடிப்படையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த யுவி-சி என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (சிஎஸ்ஐஆர்-சிஎஸ்ஐஓ) மூலம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
அதாவது வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் காற்றில் பரவும் இதர கிருமிகளை இந்த யுவி-சி தொழில்நுட்பம் செயல் இழக்க செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகள், ஏசி பேருந்துகள் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் உபயோகத்திற்காக இந்தத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பத்தின் வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சரான ஜிதேந்திர சிங் நேற்று வெளியிட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், இந்தத் தொற்று ஒழிப்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் முகக்கவசம் அணிவது, இடைவெளியைப் பின்பற்றுவது, கூட்டங்களைத் தவிர்ப்பது ஆகிய தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கொரோனா பரவலை குறைப்பதற்கு ரயில் பெட்டிகள், ஏசி பேருந்துகள் மற்றும் ஏசி அறைகளில் இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் உள் அரங்கு கூட்டங்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.