நாடு முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் பரவல் பல்வேறு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1- அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிக அளவில் இல்லை. ஆனால் 2- வது அலையில் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது. அது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தற்போது கொரோனா தொற்று 2- வது அலை குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மேலும் வருமானம் ஈட்டும் நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் அந்தக் குடும்பங்கள் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.அதனால் கேரள மாநில அரசு வருமானம் ஈட்டித்தருபவர்கள் கேரளாவிலோ அல்லது வேறு எங்கும் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்திருந்தாலும் அந்த குடும்பத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்த சலுகைகளை பெறுவதற்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பிபிஎல் தகுதி பெற்றவர்களாவர். பல்வேறு தரப்பில் இருந்து இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மற்ற மாநிலங்களும் இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, கொரோனா தொற்று காரணமாக குடும்பத்திற்காக வருமானத்தை ஈட்டித்தருபவர்களை இழந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.
அதனால் கேரள மாநில அரசு அறிவித்துள்ள ஒரு குடும்பத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ரூபாய் 5,000 வழங்கும் திட்டமானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. அதனால் தமிழக அரசும் கேரள அரசை போன்று இந்தத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.