இங்கிலாந்து நாட்டில் சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. அதிலும் குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தில் அதிகளவில் அரசு ஊழியர்கள் திரண்டு விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லண்டன் காவல்துறையினர் கொரோனா விதிமுறையை மீறி விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றதை உறுதிப்படுத்தினர்.
இவ்விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியபோதும், அவர் பதவிவிலக வேண்டும் என எதிர்க் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நெறிமுறையை மீறி நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்நாட்டின் நிதி மந்திரி ரிஷி சுனக் போன்ற இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இருவருக்கும் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் இருவருக்கும் 50 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 ஆயிரம்) முதல் 300 பவுண்டுகள் (ரூ.30 ஆயிரம்) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.