உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று ஒருமுறை பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் வருமா என்ற கேள்வி பலகோடி மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.
உலகில் ஒரு பெரும் தொற்று நோயாக மாறி வருகிறது இந்த கொரோனா வைரஸ் தொற்று. இந்த வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் முக்கிய கேள்வி ஒன்று எழுந்திருக்கிறது. அது என்னவென்றால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டு வந்தவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருக்கிறதா என்பதுதான். இது குறித்த பதில் விஞ்ஞானிகளுக்கே இன்னும் உறுதியாக தெரியாத ஒன்றாகத்தான் உள்ளது. அதே நேரம் இந்தத் தொற்று மீண்டும் தாக்குவதற்கு சாத்தியம் இல்லை என்பது அவர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.
இதையொட்டி சுகாதார வல்லுனர்கள் கூறும் கருத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று நோய்க்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதுதான். ஆனால் இந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் அவர்களை மீண்டும் கொரோனா தாக்குவதில் இருந்து பாதுகாக்கும் அல்லது அந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பற்றி தெரியவில்லை என்கிறார்கள் சுகாதார வல்லுனர்கள்.
இது குறித்து வல்லுனர்கள், கூறும்போது, ” மக்கள் ஒரே நோய்த்தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது பரிசோதனை அறிக்கைகள் தவறாக அமையலாம்” என்கிறார்கள். விஞ்ஞானிகளை பொறுத்த வரை ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டபின் அவர்கள், மற்றவர்களுக்கு தொற்றை பரப்புவதற்கான சான்று எதுவும் இல்லை என்பதும் உண்மை. எனவே ஒரு நபருக்கு மீண்டும் கொரோனா வந்தால், அதை அவர் மற்றவர்களுக்கு பரப்பும் ஆபத்து இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இதுபற்றி பாஸ்டன் மருத்துவ கல்லூரி உலக பொது சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் பிலிப் லாண்ட்ரிகன் கூறுகையில், “முதல் முறை தொற்று ஏற்பட்டு, 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு ஆன பிறகு அதே நபர் மீண்டும் அந்த தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இது இப்போதுதான் வளர்ந்து வருகிற அறிவியல்” என்று கூறியுள்ளார். சென்ற வாரம் வெளியாகி உள்ள அமெரிக்க ஆய்வின்படி, லேசான தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள், சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும், அவர்கள் மீண்டும் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளன.
ஆனால் ஆன்டிபாடிகள் மட்டுமே வைரசுக்கு எதிரான ஒரே பாதுகாப்பு விஷயம் அல்ல. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளும் பாதுகாப்பை வழங்க உதவும் வகையில் இருக்கும் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரை மீண்டும் தாக்குமா? என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுதான். அப்படி மீண்டும் வரும் என்றால் அது, “நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட் இருக்கிறது (நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்), பணிக்கு செல்லலாம்” என்ற கருத்தை பாதிப்பதாக அமையும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.