கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அப்பகுதிக்கு தகரம் அடிப்பதற்கு காரணம் என்னவென்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது கணவருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதித்திருப்பது கண்டறியபட்டதாகவும் எங்கு சிகிச்சை பெறுகிறீர்கள் என தங்களை கேட்காமல் வலுக்கட்டாயமாக மையத்திற்கு அழைத்து சென்றதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்தப்பகுதியில் தகரம் அடிக்கபடுவதன் காரணம் என்னவென்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். என்ன விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது என்றும் அவர்கள் வினவினர். இது பற்றி பதில் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.