கேரளாவில் கொரோனா பாதித்தவர் வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயலூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில், ஐந்து பேருக்கு ஒரே சமயத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.தற்போது அவர்கள் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதனால் அந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
அதன் பின்னர் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அந்தக் குடும்பத்தை சார்ந்தவர்கள் தான் அப்பகுதி முழுவதும் கொரோனா பரவியதாக வதந்தி பரவியுள்ளது. அதன் காரணமாகவே மர்ம நபர்கள் அந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.