நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்நிலையில் நாடுமுழுவதும் மீண்டும் சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்குவங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலத்தின் தினசரி பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பி ஏ 2.75 என்ற புதிய துணை வகை வைரஸ் கன்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டு வர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்த அரசு ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் விடுப்பு என்பது குறித்த மனிதவள மேலாண்மை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்தாலும், சிகிச்சையில் இருந்தாலும் அத்தனை நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். மருத்துவரின் சான்றிதழ் அடிப்படையில் தனிமைப்படுத்தலில் இருந்த நாட்கள், சிகிச்சை இருந்த நாட்களுக்கு விடுப்பு வழங்கப்படும். அதனை தொடர்ந்து கட்டுப்பாடு பகுதிகளில் வசிப்பவர்கள் அதற்கான அறிவிப்பை சமர்ப்பித்தால் அவர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.