கொரோனவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை திமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 387 ஆக அதிகரித்துள்ளது. அதில் 301 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 86 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.
இந்த நிலையில் இன்று ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கர்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது தாயாருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அவரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மொத்தமாக அவரின் குடும்பத்தினர் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் எம்எல்ஏவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.