கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அனைவரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன் காரணமாக சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்துள்ளார்.
அதனால் கடந்த 10ஆம் தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அதனால் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு 7 மணிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.