கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா பரவாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி நாளை பொதுமக்கள் சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி நாளை (22 ஆம் தேதி) இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றுஅம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.