தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
மேலும் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் சென்னை முழுவதும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் இனி வியாழக்கிழமைதோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும் இதுபற்றி அவர் கூறுகையில் இனி வியாழக்கிழமைதோறும் பூஸ்டர் தவணைக்கு என்று சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும், தமிழக முழுவதும் 600 இடங்களில் அந்த முகாம்கள் நடைபெறும் என்றும், வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் பணியினை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.