தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவியதை அடுத்து, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்துவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும், தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும் இறப்பு விகிதம் குறையாமல் இருப்பது கவலையளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவது நோயின் தீவிரத்தை தெரியப்படுத்தாது. கொரோனாவை வளர்க்க அரசே வழி வகுக்கும் நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டார். எனவே கொரோனா இறப்பு குறித்து ஆய்வு செய்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.