Categories
மாநில செய்திகள்

கொரோனா – மருத்துவர்களுக்கு பிரத்யோக உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனப் புகார்!

கொரோனா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு பிரத்யேக உபகரணங்கள் வழங்கப்படவில்லை என மருத்துவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ”அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மனின் மறைவிற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். பழிவாங்கும் நோக்கில் நடத்தியதால்தான் அவர் காலமாகிவிட்டார். அரசு மருத்துவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற சுகாதாரத்துறை அமைச்சர் அதற்கு நேர்மாறாக தற்போது நடந்துகொள்கிறார். கோரிக்கைகளுக்காக போராடும் மருத்துவர்களை அரசு பழிவாங்குகிறது. அப்படி பழிவாங்கப்பட்டவர்களில் ஒருவர்தான் மருத்துவர் லட்சுமி நரசிம்மன்.

பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் அதிக நேரம் வேலை வாங்கப்படுவதால் கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். மருத்துவர்கள் பணியில் உயிரிழந்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க அரசு ஆணையிட வேண்டும். மேலும், மருத்துவர்களைக் காக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருப்பவர்களுக்கு தனி வார்டு மூலம் சிகிச்சையளிக்க வேண்டும். ஆனால், பொது வார்டுகளில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதனால் பிற நோயாளிகள் மட்டுமல்லாமல், மருத்துவர்களும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்பதை அரசு உதாசீனப்படுத்துகிறது.

கொரோனா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவர்களுக்கு பிரத்யேக உபகரணங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காலையிலும், மாலையிலும் பேட்டிகளில் பொய் சொல்லி வருகிறார். எனவே, மிகவும் பாதுகாக்கப்பட்ட பிரத்யேக ஆடைகள், மருத்துவ உபகரணங்களை மருத்துவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் ” என்றார்

Categories

Tech |