தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய இருதய சிகிச்சை பிரிவு மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பால்வளத்துறை அமைச்சர் நாசர், நடிகர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், பண்டிகை காலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என்றும், 2 ஆம் தவணை செலுத்த 20 லட்சம் நபர்களுக்கு அடுத்த முகாமில் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதுவரை 67% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எழுவர் விடுதலை குறித்து முதல்வர் அக்கறையுடன் இருப்பதாகவும், குடியுரிமை தலைவருக்கு கடிதம் எழுதுவதாகவும் கூறப்பட்டுள்ளது.