சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில் அமைந்துள்ள அதிநவீன ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையத்தின் திறப்பு விழாவிற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் , சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் கொரோனா பரவியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், சென்னை ஐஐடியில் பணியாற்றும் உணவக ஊழியர் மூலமாகவே தொற்று பரவி இருக்கக்கூடும்.
இதுவரை சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள், மாணவர்கள், உணவு ஊழியர்கள் உட்பட கடைநிலை ஊழியர்கள் வரை மொத்தம் 928 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் நேற்று வரை 104 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் கிண்டியில் அமைந்துள்ள, கிங்ஸ் மருத்துவமனையில் உடல் நலத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இனி வரக்கூடிய காலங்களில் கொரோனாவை தடுக்கும் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும், பொதுமக்கள் அலட்சியத்துடன் செயல்படாமல் முகக்கவசம் கட்டாயம் அணியும் பழக்கத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வரக்கூடிய மூன்று மாதங்களுக்கும் மக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.