கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு ஐஸ் கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதார வல்லுனர்கள் யோகாசனம் செய்தால், மூச்சுவிடுவது இயல்பாக நடக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் யோகாசனம் செய்து மக்களை ஊக்குவிக்கக் கூடிய வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி லிர்த்திகாஸ்ரீ ஐஸ் கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இச்சிறுமி யு.கே.ஜி படித்துக் கொண்டிருக்கிறார். இவர் நேற்று திருவண்ணாமலை மின் நகரில் இருக்கின்ற ஸ்ரீ பகவான் யோகா பயிற்சி நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 4 ஐஸ் கட்டிகள் மீது பத்து நிமிடம் அமர்ந்து சமயோகாசனம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இத்தகைய சாதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பயிற்சியாளர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் கூறுகையில், ஐஸ் கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்யும் பயிற்சியை ஒரு வருடமாக மேற்கொண்டு வருவதாகவும், அதனால் தினமும் காலையில் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்வதாகவும் கூறியுள்ளனர்.