போலி மருத்துவர்கள் கொரோனவை விட ஆபத்தானவர்கள் என்று மதுரை ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வசித்து வருபவர் ஜெயபாண்டி. இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு சிகிச்சை அளித்தற்காக காவல்துறையினர் கடந்த 2011-ம் வருடம் இவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர்.. இந்நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைத்ததை ரத்து செய்யுமாறு ஜெயபாண்டி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை நடத்திய ஜெயபாண்டியை கைது செய்யாமல், மருத்துவமனைக்கு சீல் வைத்ததற்கு அதிருப்தி தெரிவித்தார்.
இதையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவில், ” இந்த இக்கட்டான கொரோனா தொற்று காலத்தில் ஏராளமான அரசு டாக்டர்கள் மக்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் இந்த மனுதாரரை போன்ற போலி மருத்துவர்கள், கொரோனா கிருமியை விட மிகவும் ஆபத்தான கிருமிகள். போலி நபர்களின் அடையாளம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. மனுதாரரின் ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்ததில் தலையிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.