Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்னா என்ன?… “கோமாளி பட பாணியில்” கோமாவில் இருந்த மகன் கேட்டதால்… திகைத்து போன பெற்றோர்கள்…!!

கடந்த 11 மாதங்களாக கோமாவில் இருந்து நினைவு திரும்பிய இளைஞருக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்து புரிய வைக்க அவரின் பெற்றோர் திணறி வருகின்றனர்.  

இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் என்ற பகுதியை சேர்ந்த 19 வயதுள்ள இளைஞர் ஜோசப் ப்ளேவில். கடந்த வருடம் மார்ச் மாதம் 1 ஆம் தேதியன்று ஜோசப்பிற்கு வாகன விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். இதனைத்தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு சில வாரங்கள் கடந்து கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.

அதன் பின்பு இங்கிலாந்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோசப் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது அவருக்கு இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. எனவே ஊரடங்கு விதிமுறைகளால் ஜோசப்பின் பெற்றோர்  அவருடன் தங்க இயலாமல் போனது. இதனால் வீடியோ கால் வாயிலாக அடிக்கடி அவரை வீட்டிலிருந்தே பார்த்து வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவருக்கு 11 மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு அவர் படிப்படியாக சுயநினைவுக்கு திரும்பியுள்ளார். கை கால்களை அசைக்க தொடங்கியதோடு மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு சிறிது சிறிதாக பதில் அளிக்க  ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் வீடியோ கால் மூலமாக மட்டுமே பேசிவரும் பெற்றோர் கொரோனா மற்றும் ஊரடங்கு பற்றி ஜோசப்பிடம் தெரிவித்தபோது அவர் ஒன்றும் புரியாமல் இருந்துள்ளார்.

இதனால் அவரது பெற்றோர் தங்கள் மகனுக்கு ஓராண்டாக நிகழ்ந்தது எதுவுமே தெரியவில்லையே என்று அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனால் மருத்துவர்களும் அவரின் பெற்றோரும் கடந்த ஓராண்டாக உலகில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று படிப்படியாக கூறி வருகின்றனர். எனினும் ஜோசப் அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு சில காலங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |