கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் கோலாகலமாக தொடங்க இருந்தது. ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி பாரம்பரிய முறைப்படி மார்ச் 12ம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா கிராமத்தில் ஏற்றப்பட உள்ளது.
இந்த ஜோதியை முதலில் கைகளில் ஏந்தும் நபராக கிரீஸ் நாட்டின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அனா கோரகாக்கியை ஹெலெனிக் ஒலிம்பிக் குழு தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டதும் கைகளில் பெறும் முதல் பெண் என்ற பெருமையை பெற உள்ளார் கோராக்கி.
இதனிடையே சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது பற்றி ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க முடிவு செய்துள்ளது. வீரர்களின் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்யப்படுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூலையில், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில், ஒன்று அல்லது 2 ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னதாக முதலாம் உலகப்போரின் போது, ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அதன் பின்னர் தற்போது தான் கொரோனா வைரஸால் போட்டி ஒத்திவைக்க ஆலோசனை நடைபெறுகிறது.
ஒலிம்பிக் போட்டிகள் ரத்தானால் ஜப்பான் மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சியை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் முடிவு எடுத்திருந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டிகளையே ஒத்திவைப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.