செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் நிருபர்களை சந்தித்து பேசியுள்ளார்.
உலகெங்களிலும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தற்போது பல்வேறு நடவடிக்கைகளில் சுகாதார துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொற்று அதிகரிப்பின் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நிருபர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அதில் அவர் வைரஸ் தொற்று தடுப்பு முறைகளை சரியாக பின்பற்றாதது தான் தற்போது வேகமாக பரவுவதற்கு காரணம் என்றும், நோய் தொற்று உள்ளவர்கள் அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து முதலில் 70 முகாம்கள் இருந்ததாகவும், தற்போது 30 முகாம்கள் கூடுதலாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரே நாளில் ஆயிரம் பேர் வரை கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து மாவட்டத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கும் கடைகள் மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.