கொரோனா இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் இந்தியாவின் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்து வருகிறது. சில நாடுகளில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
அதிலும் குறிப்பாக நாட்டின் வட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அதனால் குஜராத்தின் அகமதாபாத், சூரத், வதிதரா, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக அகமதாபாத்தில் வெள்ளிக்கிழமை இரவு 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை 57 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப் போலவே மத்திய பிரதேசத்தில் போபால், இந்தூர், குவாலியர், ரத்லம், விதிஷா ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தொழிலகங்கள் மற்றும் இன்றியமையா சேவைப் பணிகள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி வரையில் மூடப்பட்டிருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.