சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் நாட்டு மக்களுக்கு ஜனவரி 16-ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். குறிப்பாக முன்களப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட முக்கியத் துறையில் பணியாற்றுவோர் நிச்சயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றைப் போலவே தடுப்பூசியைப் பார்த்தும் அச்சம் கொள்பவர்களும், இரண்டு டோஸ்களைப் போட்டுக் கொள்ள வேண்டுமே என்று அஞ்சுபவர்களும் உண்டு. ஆனால், முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், ஏன் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வதில்லை என்பது தான் தற்போதைய கேள்வியே. தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது முதலே, தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்களுக்கு சற்று தயக்கம் இருந்தாலும், எந்த ஆபத்தும் இல்லை என்பதால் பலரும் தாமாகவே முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளத் தொடங்கினர்.
அந்த வகையில், இதுவரை நாடு முழுவதும் 11 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33. 13 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். இதில் 28.77 லட்சம் பேர் முதல் தவணையையும், 4.36 லட்சம் பேர் இரண்டாவது கொரோனா தடுப்பூசி தவணையையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த, தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து கொரோனா தடுப்பூசி முகாம்களை அதிகரித்துள்ளன.