Categories
விளையாட்டு ஹாக்கி

கொரோனோ வைரஸ்: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சீன பயணம் ரத்து

கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனோ வைரஸ் பாதிப்பு அன்றாட வாழ்க்கை முதல் விளையாட்டுப் போட்டிகள் வரை அனைத்து விதமான நிகழ்வுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த கொரோனோ வைரஸ் பாதிப்பால் இதுவரை 636 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்திய மகளிர் ஹாக்கி அணி மார்ச் 14 முதல் 25ஆம் தேதிவரை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் தற்போது அங்கு கொரோனோ வைரஸ் காரணமாக நிலவிவரும் அசாதாரண சூழலையடுத்து இந்தத் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian women's hockey

இதனிடையே இது குறித்து பேசிய இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், கொரோனோ வைரஸ் காரணமாக எங்களது தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் தற்போது பல அணிகள் எஃப்ஐஎச் ப்ரோ ஹாக்கி தொடரில் பங்கேற்றிருப்பதால் இந்திய அணியால் அவர்களுடன் போட்டியில் பங்கேற்க முடியாது. ஹாக்கி இந்தியாவும் எங்களது பயிற்சியாளர்களும் யாருடன் விளையாடுவது என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

ஒலிம்பிக் தொடருக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் அதற்கு தயாராக குறைந்த காலமே உள்ளது. நல்ல முறையில் தயார் ஆவதற்கு நல்ல அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 16 – மார்ச் 14ஆம் தேதிவரை நான்கு வாரங்களுக்கு இந்திய அணி பயிற்சி முகாமில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து நடைபெறவிருந்த சீன தொடர் தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதால் இந்திய அணி மூன்று வாரங்களுக்கு ஓய்வில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Categories

Tech |