கொலம்பியா நாட்டின் கரீபியன் கடலோர பகுதியிலுள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் சொல்டிஜிட்டல் என்ற பெயரிலான வலைதள செய்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இவற்றில் லீனர் மோன்டிரோ ஆர்டிகா (37) மற்றும் திலியா கான்ட்ரிராஸ் கேன்டில்லோ (39) ஆகிய இருவர் செய்தியாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் திருவிழா ஒன்றை படம்பிடிக்க சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் சான்டா ரோசா டி லிமா பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் செய்திகளை சேகரித்துகொண்டு திரும்பி கொண்டிருந்தனர்.
அதன்பின் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மர்மநபர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 2 பேரும் இறந்து விட்டனர். திரு விழாவில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த துப்பாக்கிசூடு சம்பவம் நடந்திருக்கும் என காவல்துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும் பத்திரிகையாளர்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடத்துமாறு ப்ரீ பிரஸ் பவுண்டேசன் என்ற அமைப்பு சார்பாக காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. கொலம்பியாவில் சென்ற வருடம் வன்முறை, படுகொலை ஆகியவற்றால் பத்திரிகையாளர்கள் 768 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.