திருமணமாகி 8 மாதங்களில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் தூசூரில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவர் சேந்தமங்கலத்தை சேர்ந்த சிந்துஜா என்ற பெண்ணை கடந்த 8 மாதங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சிந்துஜா வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நாமக்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிந்துஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த நிலையில் திருமணமாகி 8 மாதங்களில் இளம்பெண் உயிரிழந்ததால் நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளாவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இதனைதொடர்ந்து சிந்துஜா தற்கொலை செய்துகொண்டார அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.