கிணற்றில் மூதாட்டியின் பிணம் மிதந்தது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கோபாலபுரம் பகுதியில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் கிணற்றில் மூதாட்டியின் உடல் மிதப்பதாக அப்பகுதியினர் நாமகிரிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மூதாட்டியின் உடலை மீட்டனர்.
இதனையடுத்து மூதாட்டியின் உடலை உடற்கூறு ஆய்விற்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த சரோஜா(66) என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சரோஜா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.