உத்தரப்பிரதேசம் முஸாபர்நகர் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, சென்ற 2015-ம் வருடம் பிப்..17ம் தேதி காணாமல்போனார். இது தொடர்பாக கோண்டா போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து ஆக்ராவில் ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், அது தனது மகள்தான் என தந்தையால் அடையாளம் காட்டப்பட்டது. அதன்பின் பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 18 வயதான 12ம் வகுப்பு மாணவர் மீது பெண்ணை கடத்தி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
எனினும் தன் மகன் குற்றமற்றவர் என்பதை உறுதியாக நம்பிய அவரது தாய் அந்த பெண்ணை தனியாக தேடி அலைந்தார். அப்பெண்ணின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு மாணவனின் தாய் எங்கெங்கோ சென்று எல்லோரிடமும் காட்டி பெண்ணைத் தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் பிருந்தாவனில் ஒருவர் சொற்பொழிவாற்ற வந்து இருந்தார். அப்போது அங்கு குற்றம்சாட்டப்பட்ட மாணவனின் தாயும் சென்றிருந்தார். அக்கூட்டத்தில் சாமியாருடன் வந்திருந்தவர்களில் ஒரு பெண்ணை பார்த்ததும் அடையாளம் தெரிந்துவிட்டது.
அதாவது, அவர்தான் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் என மாணவனின் தாயார் கண்டுபிடித்தார். உடனே போலீஸ் நிலையத்தில் அப்பெண் குறித்து தகவலளித்துள்ளார். அதன்பின் கடந்த திங்கள்கிழமை அப்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட பெண்தான் இவரா என்பதை உறுதிசெய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையில் இந்த பெண் தான் தங்களது மகள் என்பதை அவரது பெற்றோர் அடையாளம் காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சாமியுருடன் ஆசிரமத்தில் சேருவதற்கு அப்பெண் குடும்பத்தை விட்டு ஓடியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.