2 பேரை கொலை செய்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் .
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பவுலின் மேரி தனது தாயான தெரசம்மாள் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பவுலின் மேரி, தெரசம்மாள் ஆகிய 2 பேரையும் கொலை செய்தது கடியம்பட்டினத்தை சேர்ந்த அமலசுமன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அமலசுமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் அரவிந் அமலசுமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் அமலசுமனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.