பாஜக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளர் கலிவரதன் கடந்த 8ஆம் தேதி திருவெண்ணைநல்லூர் ஒன்றிய செயலாளர் பிரபுவிடம் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தொலைபேசியில் கேட்டிருக்கிறார். அப்பொழுது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கலிவரதன் தனது ஆதரவாளர்களுடன் பிரபுவின் வீட்டிற்கு சென்று மிரட்டியதோடு பிரபுவின் மனைவி செல்லம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கலிவரதன் உட்பட 10 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
தேர்தல் பிரச்சாரம் செய்தபோது பாஜக வேட்பாளர்கள் கலிவரதன் பாமக நிறுவனர் ராமதாஸை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனை கண்டித்து கலிவரதனுக்கு எதிராக பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுமட்டுமல்லாமல் ஆறு மாதத்திற்கு முன்பு பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பண மோசடி மற்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கலிவரதன் மீது போலீசில் புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது