தி.மு.க பிரமுகர் மீது கொலை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் முன்னாள் நகராட்சி தலைவரான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தி.மு.க கவுன்சிலராக இருக்கும் ஜே.கே மணிகண்டன் என்ற மகனும், முன்னாள் தி.மு.க கவுன்சிலராக இருந்த ஜே.கே பர்மன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பர்மனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கணவன்-மனைவியான வேலாயுதம் மற்றும் ஹேமாவதி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நேற்று முன்தினமும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் ஹேமாவதியின் உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
இந்த சத்தத்தை கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த பர்மன் அவர்களை சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். இதன் காரணமாக ஹேமாவதியின் உறவினர்களுக்கும், பர்மனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பர்மன் தன்னுடைய வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பிய போது அவரை பின்தொடர்ந்து வந்த கார் பொன்னியம்மன் கோவில் அருகே பர்மனின் மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பர்மன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.