வேளாண்மை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்மேட்டுப்புதூர் கிராமத்தில் வைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தங்கவேல், வணிகத் துறை உதவி வேளாண் அலுவலர் கார்த்திக், விவசாயிகள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், பருப்பு, சூரியகாந்தி விதை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை தரம் அடிப்படையில் இணையதளம் மூலம் எப்படி விற்பனை செய்வது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து விற்பனை வணிக துறை மூலம் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தாங்கள் வாகனம் மூலம் கொண்டுவரும் வேளாண் விளை பொருட்களுக்கு இணையதளம் மூலமாக பதிவு செய்யும் முறை, தர நிர்ணயத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்து இணையதளம் மூலம் டெண்டர் விடுதல், இணையதளம் மூலம் ஏலம் கூறும் வழி முறைகள், மேலாண்மையை கடைப்பிடித்தல், எடை மேடையில் விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருட்களை அளவீடு செய்தல், வேளாண் விளை பொருட்களுக்கான ரொக்கத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு இணைய தளம் மூலம் மொத்தமாக செலுத்தும் வழிமுறை போன்றவை குறித்து வியாபாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.