மேட்டூர் அணையிலிருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் வினாடிக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீரானது வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நிலவரப்படி வினாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீரானது சென்றது. அத்துடன் கீழணையிலிருந்தும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம்ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இந்த சூழ்நிலையில் வினாடிக்கு 4 லட்சம் கன அடி தண்ணீர் போகும் அடிப்படையில் பரந்துவிரிந்து காணப்படும் கொள்ளிடம் ஆறு ஆக்கிரமிப்பாலும், சரியாக தூர்வாரப்படாததாலும் 2 லட்சம் கனஅடி தண்ணீரை கூட வெளியேற்ற முடியாமல் தனது வழக்கமான வழிதடத்திலிருந்து திசைமாறி கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்ஸ்ம் சிதம்பரம் பகுதியில் கொள்ளிடம் கரையோரமுள்ள திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், கீழ திருக்கழிப்பாளை, சின்ன காரமேடு, வீரன் கோயில் திட்டு, எருக்கன் காட்டுப்படுகை ஆகிய பகுதிக்களுக்குள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் அந்த கிராமங்கள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி 1,500க்கும் அதிகமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இவற்றில் தாழ்வான பகுதியிலிருந்த பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு, புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளின் மாடியிலும், அருகிலுள்ள உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
எனினும் வீடுகளிலுள்ள அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அத்துடன் விளை நிலங்களுக்குள்ளும் புகுந்த வெள்ளத்தால் பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டது. பல்வேறு இடங்களில் பயிர்கள் நீரில்மூழ்கி கிடக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையில் காட்டுமன்னார் கோவில் அருகில் குணவாசல் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான 2 மாடுகள் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன் மேய்ச்சலுக்காக சென்றது. அம்மாடுகள் திரும்பி வருவதற்குள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாடுகள் வீட்டுக்கு திரும்பமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 3 நாட்களுக்கு பின் மாடுகள் வெள்ளத்தில் நீந்தியபடி உரிமையாளரின் வீட்டை தேடிவந்தது. இதனை பார்த்த சுப்பிரமணியனின் குடும்பத்தினர் மாடுகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.