வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையில் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி போன்ற அணைகள் நிறைந்ததால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணை, கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 27 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இந்த ஆற்றின் கரையோர பகுதிகள் வலுவிழந்து காணப்படுவதால் கற்களைக் கொட்டி அதை வலுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்ததது. அதன்படி அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுக்காட்டூர், ஜெயங்கொண்ட பட்டினம், கீழக் குண்டலப்பாடி, மடத்தான் தோப்பு, பெரம்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் முகாம்களில் தம்பியுள்ள பொதுமக்களை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போன்றோர் நேரில் சந்தித்து ஆதரவு கூறியதோடு அவர்களுக்கு வேண்டிய குடிநீர், உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.