கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு விரட்ட சபதமெடுப்போம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் சூளுரைத்தார்.
நேற்று தேர்தல் பிரச்சார சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், செம்மொழிக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்பது நூறு வருட கோரிக்கை. ஆட்சியில் காங்கிரஸ் திமுக கூட்டணி இருந்தபோது முதல் நிபந்தனையாக வைத்து பெற்றுக்கொடுத்தார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் இன்று அதன் நிலைமை என்ன? இதைவிடவும் தமிழ் துரோகம் இருக்க முடியுமா? செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிதி கொடுக்காமல் ஆய்வு பணிகளை செய்ய விடாமல் உரிய அலுவலர்களை நியமிக்காமல் அந்த நிறுவனத்தையே பழாக்கிவிட்டார்கள். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது மத்திய பாஜக அரசும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அதிமுக அரசும் தான்.
தனியாக செயல்படும் ஒரு நிறுவனத்தை ஒரு பல்கலைக்கழகத்தில் துறையாக மாற்றுவது போன்ற ஒரு தமிழ் துரோகம் இருக்க முடியுமா? செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் தான் இருக்க வேண்டும். அதை வேறு மாநிலத்திற்கு வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற்றி அமைக்கும் முடிவை திமுக கடுமையாக எதிர்க்கும். ஆண்டுக்கு ஒருமுறை பாரதி பிறந்த நாள் அன்று மட்டும் தமிழ் மீது பாசம் கொண்டவர் போன்று எதற்காக பிரதமர் நடிக்கவேண்டும். மத்திய அரசின் இந்த முடிவை தமிழக முதலமைச்சர் எதிர்த்து இருக்க வேண்டாமா? தமிழை செம்மொழி நிறுவனத்தை காக்கும் கடமை தமிழ்நாட்டு முதல்-அமைச்சருக்கு இல்லையா?
இவர்களை பார்த்து தான் பாரதியார் பாடினார் நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறமு மின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே செம்மை மறந்தா ரடீ கிளியே என்று பாரதியார் பாடினார். இவர்களைத்தான் நடிப்பு சுதேசிகள் என்று பாரதியார் கூறினார். விவசாயியாக ஏழைத்தாயின் மகன் அடித்து நாட்டு மக்களை இயக்குகிற கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தேர்தல்தான் இந்த சட்டமன்ற தேர்தல். தமிழுக்கு துரோகம், தமிழர்களுக்கு துரோகம், தமிழ்நாட்டிற்கு துரோகம் இதுதான் பழனிச்சாமியின் ஆட்சியின். முப்பெரும் கொள்கை கொள்ளை மட்டுமே இலக்கு.
இந்த கொள்ளைக் கூட்டத்தை கோட்டையை விட்டு விரட்டுவதற்கு திண்டுக்கல் மக்கள் சபதம் எடுக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பலர் அணிதிரண்ட ஊர் இந்த திண்டுக்கல். சிவகங்கையிலிருந்து பெரிய மருது , சின்ன மருது , வீரபாண்டியன், வேலுநாச்சியார், மைசூரிலிருந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான் ,பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும், கோபால நாயக்கரும் இந்த திண்டுக்கல் மண்ணில் ஒன்றாக சேர்ந்து போராட தொடங்கினார்கள். அதனால்தான் தென்னகத்தின் குருசேத்திரம் என்று திண்டுக்கல் வர்ணிக்கப்பட்டது. அப்படிப்பட்ட இந்த திண்டுக்கல் மாவட்டமானது தமிழகத்தை மீட்கும் யுத்தத்திற்கு அசைக்க முடியாத பலம் ஆகட்டும். கழகம் வெற்றி பெறட்டும். கோட்டையை மீட்போம். தமிழகம் மீட்போம் என ஸ்டாலின் சூளுரைத்தார்.