கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றிக்கோட்டில் சி.எஸ்.ஐ ஆலயம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் ஆலயத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை ஒருவர் குச்சி மூலம் திருடிக் கொண்டிருந்ததை சபை செயலாளர் பார்த்துள்ளார். பின்னர் பொதுமக்கள் அந்த நபரை பிடித்து ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது முட்டைக்காடு டாஸ்மாக் கடை அருகே சிறுநீர் வருகிறது என கூறி நைசாக அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சித்தரங்கோடு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மேக்காமண்டபம் ஆர்.சி தெருவில் வசிக்கும் பெனான்ஸ் என்பது தெரியவந்தது. மின்வாரிய ஊழியரான பெனான்ஸ் கோவையில் இருக்கும் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். பின்னர் வேலைக்கு செல்லாமல் மது குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் பெனான்ஸ் திருடனாக மாறியது தெரியவந்தது. இதனையடுத்து பெனான்சை போலீசார் கைது செய்தனர்.