திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசமானது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு அருகில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட வைக்கோல் படப்புகளை அடுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு வைக்கோல் படப்புகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைக்கோல் படப்பில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசமானது. மேலும் குடியிருப்பு பகுதிக்கு தீ பரவியதால் இரண்டு பசு மாடுகள் இறந்துவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.