மின் கம்பியில் உரசியதால் வைக்கோல் லோடு தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்கோவில் சாலையில் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மோகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் வல்லாளப்பட்டி அருகில் சென்று கொண்டிருந்த போது மேலே சென்ற மின் கம்பியின் மீது வைக்கோல் உரசி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர் பக்கவாட்டில் இருந்த கண்மாய் தண்ணீரில் லாரியை இறக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் சக்கரம் சகதியில் சிக்கி தண்ணீருக்குள் இறங்காமல் நின்றது. மேலும் கிராம மக்கள் ஓடி வந்து லாரியை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் வைக்கோல் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைக்கோலில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இந்த தீ விபத்தில் வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.