நாமக்கல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன் கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றமானது 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அவர்கள் அனைவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். இதேபோன்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இவ்வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிறழ் சாட்சியாக மாறிய கோகுல்ராஜ் உடன் கல்லூரி வகுப்பில் பயின்ற சுவாதியை காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன்படி நீதிபதிகள் முன்பு சுவாதி இன்று ஆஜராகி கூறியதாவது “கோகுல்ராஜ் கல்லூரியில் என்னுடன் படித்தார். நானும் அவரும் ஒரேவகுப்பு தான். சக மாணவரைப் போன்று கோகுல்ராஜை எனக்கு தெரியும்.
அவர்களோடு பேசுவது போன்று கோகுல்ராஜிடமும் பேசி இருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார். அதன்பின் கோகுல்ராஜ் வசதிகுறைந்த வகுப்பை சேர்ந்தவர் என்று உங்களுக்கு தெரியுமா என நீதிபதிகள் கேட்டத்தற்கு, தெரியாதென சுவாதி பதில் அளித்துள்ளார். மேலும் கடந்த 2015ம் வருடம் ஜூன் 23ம் தேதி கல்லூரி முடிந்து, அன்று என்ன நடந்தது என்பதை கூறுங்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 7 வருடங்கள் ஆன நிலையில் நினைவிருக்க வாய்ப்பில்லை.
இதனால் தேவையானவற்றை நாங்கள் நியாபகப்படுத்துகிறோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துஉள்ளனர். இந்நிலையில் சுவாதி அன்று நான் யாரையும் பார்க்க செல்லவில்லை என தெரிவித்து உள்ளார். நீங்களாக உண்மையை சொல்லவில்லை எனில் அது குறித்த வீடியோவை போட்டுக் காண்பித்து, பொய் சொல்லியதாக நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். அதனைதொடர்ந்து அந்த வீடியோவில் கோகுல் ராஜூடன் இருப்பது நான் இல்லை என்று சுவாதி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனை நீதிபதிகள் பதிவுசெய்து கொண்டனர்.