தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கோடைகாலம் தொடங்கியிருக்கின்ற நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. இதனால் பருவக் கால பழங்கள், பழச்சாறுகள் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. அந்த வகையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இளநீர், தர்பூசணி, வெள்ளரி, மோர், கரும்புச்சாறு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
வெயில் காலத்தில் இயற்கையான பழங்கள் மற்றும் பழரசங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நமது உடலில் வெயில் காலங்களில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளை சரிசெய்ய முடியும். பழங்கள் மட்டுமல்லாமல், அதிக அளவிற்கு தண்ணீரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தேனி, கரூர், திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களில் பழங்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200 க்கு விற்பனை செய்த மாதுளை தற்போது கிலோ ரூ.350 வரையும், ஒரு கிலோ சாத்துக்குடி 40 வரையும், திராட்சை, ஆரஞ்சு ரூ.20 முதல் ரூ. 40 வரையும், முலாம்பழம் ரூ.20 வரையும், தர்பூசணி 10 வரையும் அதிகரித்திருக்கிறது.