இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது கடந்த 2009-ம் ஆண்டு இறுதி கட்ட போர் நடைபெற்றது. அப்போது மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரியாக இருந்தார். இவர்தான் இறுதி கட்ட போரை முன்னின்று நடத்தினார்.
அந்த போரில் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டில் முன்னாள் அதிபர் மைத்ரியபால சிறிசேனா ஆட்சி காலத்தின் போது ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்தில் இலங்கை ராணுவம் மீது போர்க் குற்றம் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
அதை தொடர்ந்து போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதை அமல்படுத்த முடியாது என்றுஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார். மேலும், தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மாட்டோம். இந்த விவகாரம் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஒப்புதலுடன் மட்டுமே சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த அறிவிப்பு இலங்கையில் வாழும் ஈழ தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.