கோமாரி நோய் தாக்கி ஏராளமான மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, நரசிங்கம்பட்டி, அபிராமம், ஆதிபராசக்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பசு மாடுகள் கால், வாய், நாக்குகளில் புண் ஏற்பட்டு இரை சாப்பிட முடியாமல் அவதியடைந்து வருகின்றது. இதனால் 10 லிட்டர் பால் கொடுக்கும் பசு மாடுகள் 1 லிட்டர் பால் கொடுக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கி மாடுகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏராளமான மாடுகள் உயிரிழந்து வருகிறது.
மேலும் நரசிங்கம்பட்டி பகுதியில் வசிக்கும் பாண்டி என்பவருக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட மாடுகள் இந்த நோய் தாக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கால்நடை மருத்துவமனை சார்பில் முகாம் அமைத்து மாடுகளுக்கு தடுப்பூசி போடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து மாடுகள் உயிரிழந்து நஷ்டமடைந்த உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.