தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து கடைகள், தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் சில மாதங்களாக அனைத்தும் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கோயில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வாறு கோயில் திறப்பு சம்பந்தமாக பாஜகவினருக்கும், ஆளும் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில் தக்கலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், வழிபாட்டுத் தலங்களை முழுமையாக திறந்தபோது மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை. அதனால் தற்போது கொரோனா பரவலை தடுக்க வழிபாட்டுத் தலங்களில் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. கோயிலும் அங்கேதான் இருக்கும், சாமியும் அங்கேதான் இருப்பார். எனவே கொரோனா குறைந்த பிறகு வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாமே, திடீரென கொரோனா பரவினால் அரசை குறை சொல்வதற்கா? என்று கூறியுள்ளார்.