தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமை ஆகும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் வெளியிட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கோவில் சொத்துக்கள், சிலை, நகை, விழாக்கள் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் வெளியிட ஏற்கனவே உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.