கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவை சேர்ந்த தலைவருக்கு எதிராக அக்கட்சியின் கவுன்சிலர்களே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவை சேர்ந்த அழகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது அவருக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயன்றனர்.
ஊராட்சி ஒன்றிய தலைவரான அழகேசன் தங்களுக்கு உரிய மரியாதையை அளிப்பது இல்லை என்றும் தங்களுக்கு வார்டுகளுக்கு நலத் திட்டங்களை கொண்டு வர முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து அவர்கள் அழகேசனுக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கவுன்சிலர் திருமதி வடிவு கூறுகையில் ” இதுவரையில் வேலை எதுவும் நடக்கவில்லை.
இதை தான் அவரிடம் கவுன்சிலர் என்ற முறையில் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அதற்கு சேர்மன், எங்களை வெளியே தள்ளி கதவை அடைக்குமாறு கூறினார். இவ்வாறு கூறும் அளவிற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம். இந்த அளவிற்கு என்ன கீழ்த்தரமான செயலை நாங்கள் செய்தோம். அதிகாரிகளிடம் தவறான முறையில் நடந்துவுள்ளோமா? எங்கள் சேர்மனிடம் நாங்கள் தவறாக நடந்துவுள்ளோமா? திமுகவில் ஒரு அணியின் துணை தலைவரை திமுகவை சேர்ந்த சேர்மனே வெளியேற்றும் அளவிற்கு என்ன சம்பவம் நிகழ்ந்து விட்டது.
எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தாருங்கள் என்று கூறியது தவறா?” என்று கூறினார். பின் கவுன்சிலர் திருமதி. ஆரோக்கிய சவுமியா பேசுகையில், ” கதவை மூடுங்கள். இவர்களையெல்லாம் வெளியே தள்ளுங்கள் என்று ஒரு ரவுடி மாதிரி தான் அவர்கள் நடந்துக் கொண்டார்கள். மேலும் வருகை பதிவேட்டில் கையெழுத்து இட கேட்டாலும் கூட அதையும் தர முடியாது என்று மறுக்கின்றனர்” என்று கூறினார்.