மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 5,000 ரூபாயும், குறைந்தபட்ச பாதிப்புள்ள மாற்றுதிறனாளிகளுக்கு 3,000 மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த போராட்டத்திற்கு நகர தலைவர் பராசக்தி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து சங்கத்தின் நிர்வாகிகள் முருகன், சக்திவேல், ஆறுமுகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதனை அறிந்த மாவட்ட தாசில்தார் தமிழரசி மற்றும் அதிகாரிகள் மாற்று திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருப்பினும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் தொடரும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் தெரிவித்துள்ளனர்.